×

காசு இல்லாமல் கட்சியில் இருப்பதை நினைத்து வேதனையில் இருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மா ஜி அமைச்சரை பகைத்து கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்யும் மக்கள் பிரதிநிதி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ராஜ்ஜியம் நடத்தி வந்த மாஜி அமைச்சர் கில்லாடி, அவர் செய்த முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்களை சுயேட்சை எம்எல்ஏ ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகிறாராம். இதுல, முதல் கட்டமாக, தனக்கு வேண்டியவர்களை ஆசிரியர்களா நியமனம் செய்தார். இதில் பலர் ஆசிரியர் படிப்பு படிக்காமல், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவில்லையாம். இவர்கள் சான்றிதழ் போலியானது என்ற உண்மையை சுயேட்சை எம்எல்ஏ பானையை போட்டு உடைப்பது போல உடைத்துள்ளார். ஏனாம் பிராந்தியத்தில் கில்லாடி அமைச்சராக இருந்தபோது, நியமிக்கப்பட்டவர்களின் கல்வி சான்றிதழ்களை போலீசார் சோதனை ெசய்தாங்க. அனைத்தும் அதிர்ச்சி ரகமாம்.

இதனை தொடர்ந்து போலி சான்று விவகாரத்தில் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதோடு அந்த சுயேட்சை எம்எல்ஏ நின்றுவிடவில்லை. எனக்கு எதிராக அரசியல் செய்யும் கில்லாடியின் தகிடுதத்தங்கள் ஒவ்வொன்னும் வெளியே வரும் என்று சூளுரைத்திருக்கிறராம். மேலும் கல்வி சான்றிதழ், நியமனம் உத்தரவு என எல்லாவற்றையும் தோண்டி எடுக்க முடிவு செய்திருக்கிறாராம். தகுதியில்லாதவர்களையெல்லாம் உயர் பதவிக்கு கொண்டு வந்து உட்கார வைத்திருக்கும் கில்லாடியின் செயல்களை அம்பலப்படுத்தினால் தான் முகத்திரை கிழியும் என எல்லோரிடமும் கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சி இல்லாமல் தள்ளாடும் குக்கர் கட்சி நிர்வாகிகள் எந்த மாவட்டத்துல இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் மலைக்கோட்டையில் கடைசி எழுத்தில் முடியக்கூடிய கரன் என்பவர் முக்கிய நபராக ஒரு காலத்தில் வலம் வந்தார். இலை கட்சி 3 அணிகளாக பிரிந்ததால் கரன், இலை கட்சியில் இருந்து வெளியேறி குக்கர் கட்சிக்கு தாவினார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் குக்கர் கட்சியில் சீட் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சுயேட்சையா போட்டியிட கரன் முடிவு செய்துள்ளாராம். அதற்கான திரைமறைவு வேலையில் தீவிரமா இறங்கியுள்ளாராம். முன்னோட்டமாக நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களுக்கு அழையா விருந்தாளியாகவும் சென்று வருகிறராம். மலைக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பிசினஸ் செய்து வரும் அவரிடம், பல பேர் வேலை கேட்டு சென்றார்களாம். அப்போது, அவர்களிடம், நானே வேலை இல்லாமல், கையில காசு இல்லாமல் வெட்டியாக உட்கார்ந்து இருக்கேன். வருமானமே இல்லை என அவர்களிடம் கடிந்து கொண்டாராம்.

இவருக்கே ‘விட்டமின் ப’ தட்டுப்பாடா என குக்கர் கட்சியினர் ஒரு குடிசையில் உட்கார்ந்து சிரித்தபடி இருந்தனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரே கட்சியின் இரண்டு தலைவர்கள் பேசியதை பற்றி சொல்லுங்க, கேட்கலாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் தேனிக்காரர் பேசும்போது, திருச்சியில் நடக்கிற மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சின்ன மம்மிக்கும், கடலோர மாவட்டத்தை சேர்ந்த அரசரான மாஜி அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றாராம். இந்தத் தகவலறிந்த அரசரான மாஜி, ஆடிப் போனாராம். தனக்கு வேண்டிய கட்சிப் பிரமுகர்களிடம், ‘சின்ன மம்மிக்கு ஆதரவாக பேசியதற்காகத்தான், ஒருங்கிணைப்பாளராக இருந்த தேனிக்காரர், இணையாக இருந்த சேலத்துக்காரருடன் சேர்ந்து, என்னை பொறுப்புகளிலிருந்து நீக்கினாங்க. நான் தற்போது வரை இலைக்கட்சியில்தான் இருக்கிறேன்.

எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற பீலா வேலையெல்லாம் வேண்டாம். இவரு பின்னாடியெல்லாம் நம்பி போகத் தயாராக இல்லை. மாநாட்டிற்கு சின்ன மம்மி வந்தால் எனக்கென்ன.. வராட்டி எனக்கென்ன… என ஓபனாகவே சொல்லி விட்டாராம். இவர் இலைக்கட்சியில தான் இருக்கேன்னு பல தடவை சொல்லிட்டாரு. ஆனா, அங்கே சேலத்துக்காரர், இவரை கண்டுக்கவே இல்லையாம். நம்மை மதிக்காதவருக்கு ஏன்தான் அழைப்பு விட்டோமென்று தேனி தரப்பும் ரொம்பவே நொந்து போயிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியின் மாஜி மாநகர தந்தையை பார்த்து நறநறன்னு பல்லை கடித்த நிர்வாகி யாராம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலம் மாங்கனி மாநகருல இலைகட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைக்கும் வேலையில ஈடுபட்டிருக்காங்க. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொண்டலாம்பட்டி ஏரியாவுல நடந்திருக்கு.

அதுல பேசின நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்துக்கு உங்க வார்டுக்கு மட்டும் சேலை கொடுத்து கூட்டிக்கிட்டு போனீங்க. இதுபோல எங்க வார்டுக்கும் ஏன் தரலன்னு கேட்டிருக்காங்க. இதுல கோபமடைஞ்ச நிர்வாகி ஒருத்தரு, மாநகர தந்தையா இருந்து சம்பாதிச்சி பதுக்கி வச்ச பணமெல்லாம் வீடுகளாகவும், நிலங்களாகவும் மாற்றி வச்சிருக்கிறவரு செலவு செய்ய வேண்டியது தானே.. மம்மி ஆட்சியில எம்எல்ஏவாக இருந்தவரும் சம்பாதிக்காத பணமா.. அவற்றில் கொஞ்சமாவது கட்சிக்கு செலவு செஞ்சா என்னன்னு ஒரு செம்ம கேள்விய கேட்டாராம். இன்னொரு நிர்வாகியோ, மாஜி மாநகர தந்தைய பார்த்து, நா சொல்வதைத்தான் கேட்கணுமுன்னு நறநறன்னு பல்லை கடிச்சாராம். இதனால அப்செட் ஆன அந்த தந்தையோ, இதை தட்டிக்கேட்க ஒருத்தன் வராமலா போயிடுவான்னு மனசொடிஞ்சி சொல்லிட்டு போனாராம்.

இது குறித்து சேலம்காரர் காதுக்கு கொண்டு போகப்போறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிகாரி இடமாற்றத்தால எந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்ட பாரஸ்ட் ஆபிசரா பணியாற்றி வந்தவருக்கு தமிழ் தெரியாதாம். ஆங்கிலம் மட்டும் தெரியுமாம். இதனால் இவருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மொழி பிரச்னை அதிகமாவே இருந்துச்சு. இதனால, அவர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கே வராம தவிர்த்து வந்தாராம். மொழிப்பிரச்னையால, பாரஸ்ட் ஆபிசர் பேசுறது விவசாயிகளுக்கு புரியாது. விவசாயிகள் பேசுறது பாரஸ்ட் ஆபிசருக்கு புரியாத நிலையாக இருக்கும்.

இதனால, அந்த ஆபிசரை யாரும் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில விவசாயிங்க தவிச்சு வந்தாங்க. இது தொடர்பாக பலமுறை குறைதீர்வு கூட்டங்கள்ல கலெக்டர்கிட்டயே விவசாயிங்க புகார் தெரிவிச்சாங்க. கடைசியாக கடந்த மாசம் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துல முதல்முறையாக பாரஸ்ட் ஆபிசர் கலந்துகிட்டாரு. அப்போது, விவசாயிகள் எந்த பிரச்னை குறித்து பேசுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து புரிந்து கொள்ள முடியல. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைஞ்சாங்க. இதற்கிடையில அரசு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவரை வெயிலூர் மாவட்டத்துல இருந்து துக்கியடிச்சுட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post காசு இல்லாமல் கட்சியில் இருப்பதை நினைத்து வேதனையில் இருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yaru ,Minister ,Ma Ji ,Peter Mama ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி